Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

கூழாங்கல்

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடற்கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடும். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது
என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக்கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்கும் என்றுமிருந்தது.
இதைத் தெரிந்து கொண்ட அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடற்கரை நோக்கி உடனே புறப்பட்டான்.
அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.
பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு வழக்கமாகி விட்டது.
ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்கும் முன் கடலில் தூர எறிந்து விட்டான்.
அவன் எறிந்த சில நொடிகளில் அந்தக் கல்தான் அவன் தேடி வந்த கல் என அறிந்து வேதனைப்பட்டான். இனி அதைக் கடலுக்குள்ளிருந்து எடுக்க முடியாது என்று அங்கிருந்து வருத்தத்துடன் கிளம்பினான். செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. அந்தச் செயலால் ஏற்படும் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips