கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில்
திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.
அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.
பின் அந்தக் குடிமகன் மீண்டும் தன் வண்டியில் பயணம் செய்ய ஆரம்பித்தார்.
அவரின் நிலை அப்போதே போதை உச்சத்துக்குப் போயிருந்தது.இனி எத்தனை உயிர்களை அந்த ஆசாமி கொல்லப்போறாரோ?
கேள்வியுடனே தேநீர் அருந்தலாம் என்று பேக்கரிக்கு முன் வண்டிய நிறுத்தினா,
அந்தக் கடைக்காரர் என்ன கொலவெறியில இருந்தாரோ தெரியல,
கடை ஷட்டரை எங்களப் பார்த்துக்கொண்டே “படார்”னு சாத்திட்டுப் போய்ட்டாரு.பின் புறப்பட்டு ,
போக வேண்டியதுதான்.
இரவு 11 மணியளவில் வெள்ளியங்கிரி மலையடிவாரம் சென்றடைந்தோம்.
11.15 க்கு மலயேற ஆரம்பிக்க ஆயத்தமாகினோம்.மூங்கில் குச்சி அடிவாரத்தில் எங்குமே கிடைக்கவில்லை.
போகும் வழியில் எடுத்துக்கொள்ளலாம் என்று சாமி தரிசனம் செய்துவிட்டு படியேறினோம்.
அதுவரை லேசாக குளிரடித்த காலநிலை இப்போது வியர்க்க ஆரம்பித்தது.ஒருவழியாக முதல்மலை ஏறி வெள்ளைவிநாயகர் கோவிலை அடைந்தாயிற்று.
அதன் அருகிலேயே ஒரு சோடாகடை ஒன்று.அவர்கள் சோடாவோடு உப்பைக் கலந்து தருவார்கள்.ஏனென்றால் தொண்டை வறண்டுபோகாதாம்,அடிக்கடி தாகமும் எடுக்காதாம்சோடாவும் குடித்தாயிற்று.அங்கேயே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போது அந்த சோடாக் கடைக்காரர் சொன்ன விஷயம் எங்கள் எல்லோர் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.எல்லோரும் பயத்தில் அங்கேயே உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தோம்..........................
(தொடரும்)
சீக்கிரம் சொல்லுங்க....
ReplyDeleteகாத்திருங்க, என்ன நடந்துதுன்னு யோசிக்கணுமில்ல,(மறுபடியும் ஏ அதை ஞாபகப்படுத்தறீங்க)அவ்வ்வ்வ்வ்
Delete