Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

பிறர் பார்வையில் என்னைப் பார்க்கிறேன்

ஒரு போலியான வாழ்க்கை  எல்லோரிடதிலும் உள்ளது.அதைப் பற்றி 
முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும்  பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான்

              ஏனோ இந்த சுமை மட்டும் நமக்கு வலிப்பதே இல்லை. விரும்பி துரத்திக் கொண்டிருக்கின்றோம்.ஃபாஷன் என்பது காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் “ஐ லவ் அமெரிக்கா” என்பது ஃபேஷனாயிருந்தது. இப்போது அமெரிக்காவை எனக்கு சுத்தமாய் பிடிக்காது என்று சொல்லித் திரிபவன் வித்தியாசமாய் ஏதோ விஷயம் தெரிந்தவனாய் பார்க்கப் படுகின்றான். அவன் விரும்புவதும் அதைதான். குடித்து விட்டு சுயம் மறந்து கிடக்கும் தருணங்களில் அவனும் தன் அறைத் தோழர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கலாம். “மாப்பி இந்த முறையாவது விசா க்ளியராகலைன்னா செமை கடுப்பாயிடும்டா”என்று.ஏனோ “ஹேய் அந்த நாய்க்குட்டியை பாரேன். சோ க்யூட் இல்லை” என்று எவரேனும் சொல்லும் போது, தீர்க்கமாய் அவரது கண்களை உற்றுப் பார்க்கத் தோன்றுகின்றது. நீ உண்மையில்தான் இதைச் சொன்னாயா? உனக்கு உண்மையில் நாய்க்குட்டிகள் பிடிக்குமா? இல்லை சும்மாவேனும் கூட்டத்தின் நடுவே உன் இருப்பை வெளிப்படுத்துகின்றாயா? மனதினுள் கேள்விகள் எழும்புகின்றது. அழகாய் தென்படும் எதனையும் சிலாகிப்பதற்கு முன்பு உபயோகிக்கின்ற வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது “வாவ் இட் லுக்ஸ் சோ குட்”, “நைஸ் வொர்க். ஹாட்ஸ் ஆஃப் மேன்”… பட்டியலிட்டால் விரல் விட்டு எண்ணிடலாம் இது போன்ற சம்யத்தில் நாம் பயன் படுத்தும் வாக்கியங்களை.இன்ன இன்ன வார்த்தைகளை மட்டுமே நான் உபயோகிக்க வேண்டும் என்று இந்த சமுதாயம் எனக்கு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. சுற்றி இருகும் கூட்டத்தின் நடுவே “அடங்கொக்கா மக்க, மாப்பிள்ளை கலக்கிட்டடா” என்று சிலாகிக்க, பாராட்ட தைரியம் வர மறுக்கிறது. என் பிம்பம் களைந்து விடுமோ என்று பயம் எழும்புகின்றது. 


      கட்டமைவுகளை உடைத்தெரியும் தைரியமும் இன்றி, பொதுப்புத்தியுடன் வாழவும் முடியாமல் எனக்குள் நானே குமைந்து கொண்டிருக்கிறேன்.இந்த போராட்டங்களுக்கு நடுவில் நான் எப்போது வாழ்ந்தேன் என்று யோசித்துப் பார்த்தால் குழந்தைப் பருவத்தை தாண்டி வேறு எதுவும் தோன்ற மறுக்கிறது. உண்டு, உறங்கி, வேலைகள் செய்து, எனக்கென்று ஒதுக்கப்பட்ட வாழ்நாட்களின் மொத்த எண்ணிக்கையில் ஒன்றைக் கழித்து, மறுபடி அடுத்த நாளை எனது கணக்கிலிருந்து குறைப்பதற்கான முயற்சிகளை தொடங்குகின்றேன்.உடலில் தெம்பு இருக்கும் வரைக்கும் பணம், வேலை என்று ஓடி விட்டு திடீரென்று ஒரு நாளில் பட்டென்று எல்லாவற்றையும் அறுத்துக் கொண்டு இறந்து போய்விடும் வாழ்க்கையைதான் நம்மில் பலரும் செய்துக் கொண்டிருக்கிறோமோ??சுயத்தைத் தொலைத்த்து விட்டு, போலியாய் சிரித்து, போலியாய் பேசி வாழும் இந்த நகர மனிதர்களின் மீது நம்பிக்கை தொலைந்து போய் பல காலமாகி நிற்கின்றது. ஏனோ கிராமத்து வீடும், “கிராமங்கள், இந்தியாவின் சொர்க்கங்கள்” என்ற பழமொழியும் இப்போதெல்லாம் அடிக்கடி என் கனவில் வருகின்றது. நான் மறந்து போன பல நண்பர்களும், எங்களது பள்ளிகால ஆர்ப்பாட்டங்களும், அடிக்கடி நினைவுகளில் இடறுகின்றன. சேர்ந்தாற்போல ஒரு வாரம் ஊரில் இருந்தது எப்போது என்று பார்த்தால் ஞாபகம் வர மறுக்கிறது. ஐந்து வருடத்திற்கு முந்திய, பணம் என்பது குறித்து அதிகம் அலட்டல்கள் இல்லாததுமான  கடைசியான கால கட்டங்களில் இருந்திருப்பேன் என்று எனக்குள் நானே சொல்லிக் கொள்கின்றேன்.வெள்ளந்தியாய் வாழும் என் கிராமத்து நண்பர்களைப் போலவே இருக்க ஆசைப்படுகின்றேன். 





கத்தையாய் பத்தாயிரம் ரூபாயை, முதல் மாத சம்பளமாய் என் கையில் வாங்கிய அந்த தினத்திலிருந்து அவர்கள் மீதான என் புறக்கணிப்பு தொடங்கியிருக்கலாம். “மச்சான் அவன் சென்னையில ஏதோ பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறாண்டா” என்று அவர்களுக்கிடையேயான பேச்சுக்களின் போது வெளிப்படும் என் மீதான பிரமிப்பை நான் காப்பாற்றிக் கொள்ள மிகவும் பிரயத்தனப்பட்டு வந்திருக்கின்றேன்.மூன்று மாதத்திற்கொரு முறை ஊருக்கு போகும் போது கூட, எவரையும் சந்திக்கப்பிடிக்காமல், வீட்டினுள்ளேயே முடங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது இவர்களிடம்? இவர்களுக்கு சிட்னி ஷெல்டனும் தெரியாது, சினிமேட்டோகிராஃபியும் தெரியாது? என்னதான் பேசுவது இவர்களிடம்? என்னை நானே சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு, அவர்களிடம் அந்நியப்பட்டு நின்றிருக்கின்றேன். சலனமற்று இருக்கும் தருணங்களில் உட்கார்ந்து யோசிக்கையில்தான் நாம் செய்யும் தவறுகள் நமக்கு புலப்படுகின்றது.



இவ்வளவு தத்துவமா நான் எழுதலீங்க !!







0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips