Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம் - கோ நம்மாழ்வார்


நன்றி : தினமலர்
(2011).

கிராமங்களைப் பற்றி பேசச் சொன்னால் பல் முளைக்கும் குழந்தை போல லயித்துச் சிரிக்கிறார் வேளான் ஞானி கோ.நம்மாழ்வார்.

“”எங்கள் கிராமத்து வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பி வழியும். சிறு வயதில் குட்டிக்கரணம் அடித்து குதூகலிப்போம் . வண்டிகளும், மாடுகளும் அதில்தான் இறங்கி ஏறும். பின் அங்கே பாலம் வந்தது.
கோடை காலத்தில் தண்ணீர் இல்லாத வெது மணலில் சடுகுடு ஆடினோம். இன்று வாய்க்காலில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை.
இருமருங்கிலும் நெல்லி, மா, நாவல் மரங்கள் இருந்தன. இன்று அவையெல்லாம் அருகிவிட்டன.
மாலை நேரங்களில் நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடும். தாய் தகப்பனுடன் வீட்டின் திண்ணையில் அமர்ந்து குழந்தைகளின் சேட்டைகளைக் கண்டு ரசிப்பதோடு தங்களின் கஷ்ட நஷ்டங்களை அண்டை அயலாரோடு பகிர்ந்து, கூடி வாழ்ந்தார்கள்.

இன்பம் செழித்த மருத நிலமாகத் திகழ்ந்த மக்கள் வாழ்வு இன்று பாலையாகவே மாறிவிட்டது. இன்று ஏன் நினைவுகளின் நிழலைக்கூட அங்கு காணமுடிவதில்லை.


நிலம் மலடாகிவிட்டது. உண்ணும் பொருள் அனைத்தும் நஞ்சாகிவிட்டன. மக்கள் உணவுக்குச் செலவழிப்பதைவிட மருந்துக்கும் மருத்துவருக்கும் அதிகம் செலவு செய்கிறார்கள். குடிநீரும் தாய்ப்பாலும் கூட நஞ்சாகிவிட்டன. நம் குழந்தைகள் இந்த மண்ணில் நலமாக வாழ நாம் ஒன்றும் செய்யவில்லையே!

மற்றவர்களின் மனதைக் கவரக்கூடிய செல்வம் கொழித்த பூமியாக இந்த மண் இருந்தாலே போர்ச்சுகீசியர்கள், பிரöஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் பலரும் பெரும் படையெடுத்து வந்தார்கள்.

தங்களின் லாப வேட்டைக்காக இந்த மண்ணை வெள்ளைக்காரர்கள் சந்தையாகவே மாற்றினார்கள்.
இங்கு கிடைக்கும் மூலப்பொருட்களை வாரி அள்ளிக் கொண்டு சென்றார்கள். விற்பனை செய்ய நகரங்கள் தேவைப்பட்டது. வணிகத்தை வளர்க்க நிலவரி வசூலை கையிலெடுத்தான். கிராம மக்கள் வாழ்விழக்க, வயிற்றுப் பிழைப்பிற்காக பட்டணத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்களைக் கொண்டு காடுகளை அழித்து தண்டவாளங்கள் போட்டான்.

பட்டணத்து ஆலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை மிச்சமிருக்கும் கிராமத்து மக்களின் தலையில் கட்டினான். ஒட்டுவிதை, ரசாயண உரம், பூச்சிக்கொல்லி நஞ்சுகள், களைக்கொல்லி நஞ்சுகள், எந்திரங்கள், பெட்ரோல், டீசல், மோட்டார்கள், லாரி, டிராக்டர்கள் அறுவடை எந்திரங்கள் வந்தன. கடன் பெற்று பொருள் வாங்கிய விவசாயியின் கதை முடிந்தது. கடனை அடைப்பதற்காக விளைந்த பொருட்களை கேட்ட விலைக்கு விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஜவகர்லால் நேரு தலைமையில் ஐரோப்பிய நகரப் பட்டணங்களைப் போலவே
இங்கும் நகரங்கள் உருவாக்கப்பட்டன. மீண்டும் கிராம ராஜ்யத்தை கொண்டு வராமல் போனது ஆட்சியாளர்களின் மிகப்பெரிய வரலாற்று வாழ்வியல் பிழையானது.
கிராமத்தின் வாழ்வாதாரங்கள் அழிந்தன.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் பச்சைப் புரட்சி திட்டத்தை நிறைவேற்றினார்கள். பள்ளிக்கூடம் போகாதவர்கள் கூட பட்டணத்துக்கு வழி தேடினார்கள்.
சரி, பட்டணத்துக்குச் சென்றவர்கள் எல்லாம் எப்படி இருக்காங்க? அங்கும் நல்லா இல்லை. உணவு உற்பத்தி நடக்கலை. மக்கள் நெருக்கடி ஒவ்வொரு இரவும் கூடிக்கிட்டே இருக்கு. குடிக்கக் கூடி சுத்தமான தண்ணீர் இல்லை. பெரிய பெரிய மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் இருக்கு. எல்லாருக்கும் கல்வியும் மருத்துவமும் கிடைக்கலையே.

அந்த மக்கள் கூட்டத்துக்கு கிராமப் புறங்களில் வாழ்க்கை இருக்குன்னு தெரிஞ்சாலே மறுபடியும் தங்களோட தாய் வீட்டுக்கு திரும்பிடுவாங்க. அமெரிக்கா, ஐரோப்பாவுல வேலை பார்த்த தமிழர்கள் எல்லாம் தங்களோட கிராமங்களுக்கு வந்து விவசாயம் செய்யுறாங்க. கிராமப்புற நிலங்களை எடுத்துக்கொண்டு புதிய சமூகங்களை உருவாக்குறாங்க. தற்சார்பு கிராமங்களை உருவாக்கினாலே பட்டணங்கள் பாதி காலியாகி விடும்.

பெரும்பான்மை இளைஞர்கள் மீண்டும் கிராமங்களுக்குள் தலையெடுப்பார்கள்.
நம் மண்ணை மலடாக்கத்துடிக்கும் தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள விழிப்புணர்வு பெற்ற மாபெரும் “மக்கள் பெருங்கடல் இயக்கம்’ உருவாக வேண்டும்” என்று பொங்கல் திருநாளில் போர்க்குரல் எழுப்புகிறார் நம்மாழ்வார்.

என்ன செய்யப்போகிறது இளைஞர் சமுதாயம். ஆரோக்யமான சூழலில் ஏரோட்டமா? புகை, மாசுக்களுக்கு மத்தியில் காரோட்டமா என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!




இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.

வேளாண்மைக்கும் விவசாய நிலங்களுக்கும் அழிவைத் தர முற்றுகையிடும் மரபணு விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தையும் எதிர்த்து, வேளாண் நிலமும் பயிர்களும் நச்சுத்தன்மைக்கு ஆளாகி விடாமல், பாதுகாக்க உண்மையான அறவழிப் வேளாண்மை புரட்சியை தலைமையேற்று நடத்தி, காலத்தால் அழியாத புகழ் படைத்தார்.





 இயற்கை வேளாண் 
விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர்,  (டிசம்பர் 30,2013 ல்) பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

இறந்தாலும் இயற்கை வேளாண்மையாய் நம்மோடு வாழ்வார்... நம்மாழ்வார்
அவர் ஏந்திய வேளாண்மை இலட்சியக் கொடியை உயர்த்தி அவரது கனவுகளை நனவாக்க  உறுதிகொள்வோம்!



                             ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்..


2 comments:

  1. அன்புடையீர்.
    தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!
    தங்களுக்கும் பண்டிகைக் கால வாழ்த்துக்கள்.
    ஐய்யா நம்மாழ்வார் இறைவனிடம் சரணம் ஆனதால்
    இந்த வருடம் பொங்கல் கிடையாது.
    அவர் சொன்ன இயற்கை விவ்சாயம் என்று வெற்றி அடைகிறதோ அன்றுதான்,
    நமக்கு உண்மையான பொங்கல் திருவிழா!

    ReplyDelete

Animated Social Gadget - Blogger And Wordpress Tips